ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவிக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ.3 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர( Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
குறித்த பணமானது, 2004-2008 காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு 1 மில்லியனும், மற்றையவருக்கு 2 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு விசாரணை
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை முன்வைத்து, தனது கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான விபரத்தை வெளியிடாமல் தவிர்த்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மருத்துவமனை கட்டணங்களை செலுத்த வழங்கிய ரூ.5 மில்லியன் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், ஜே.வி.பி. பெற்ற பணம் குறித்த உண்மைகளை மறைத்துள்ளதாகவும் தயாசிறி ஜெயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
