ஐந்து இலட்சம் இலங்கையர்கள் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச்சபையின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகள் என அடையாளம் காணப்பட்ட 5979 பேரில் 5449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அது (91%) வீதமாக காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்களின் பெறுமதி
இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 19 மில்லியன் ரூபா எனவும், சட்டவிரோதமாக பெறப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களின் பெறுமதி 11 457 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1078 பேரின் பெயர் பட்டியல் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இவர்களை கைது செய்ய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.