அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08.10.2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 55 வயதுடைய பிரபல வர்த்தகரான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
மேலும், பிரபல பாடகியான கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர்கள்
இதுவரை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாக இரகசிய தகவலொன்று கசிந்துள்ளது.
இதனையடுத்து, மன்னாருக்கு செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடி
மேலும், வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாருக்குள் நுழையும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக சோதனைச் சாவடி அமைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.