Courtesy: Sivaa Mayuri
2011 ஆம் ஆண்டு முதல் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை, ஈரானுக்கு(Iran) செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதியை கடனைத் தீர்க்கும் முறையாகக்கொண்டு, இலங்கை மற்றும் ஈரானிய அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட மூலோபாய உடன்படிக்கையை பின்பற்றி இந்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத் தடைகள்
கோவிட் மற்றும் 2011 முதல் விதிக்கப்பட்ட ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையின் சரிவு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சவால்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான கொடுப்பனவு நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக குவிந்திருந்தது.
இந்தநிலையில், 2024 ஜூலை 15 ஆம் திகதி நிலவரப்படி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், உறுதிப்படுத்தினார்.
2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 4.98 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1.85 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.