ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்துத் திட்டம்
அதாவது, இராஜகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தை அண்மித்த வீதிகளில் எதிர்வரும் 15ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருகைதரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருடன் கட்சியின் செயலாளர் உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு ஏற்கும் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களைத் தவிர மேலும் மூவர் தேர்தல் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.