ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடக்கூடிய தொகை நிர்ணயம் இன்று (16) செய்யப்பட உள்ளது.
இலங்கையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பதற்கான நிதி ஆதாரத்தை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு கோரியுள்ளது
அத்துடன் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவழிக்கக்கூடிய செலவின வரம்பையும் ஆணையகம் நிர்ணயிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் பிரசாரத்திற்கு செலவிடக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்ய, தேர்தல் ஆணையகம், அனைத்து வேட்பாளர்களுடனும் ஒரு முக்கிய சந்திப்பை இன்று நடத்துகிறது.
பிரசார செலவுகள்
இதற்கமைய, பிரசார செலவுகள் குறித்த உச்ச வரம்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட்டதும், அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்திற்காக செலவழித்த தொகை மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தை அறிவிக்க 21 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது
இதனையடுத்து , தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் நிதி அறிக்கைகளை மறுபரிசீலனை செய்து அதனை இணையத்தில் வெளியிடவுள்ளது.
இதன்போது, தேர்தல் ஆணையகம் முடிவு செய்த தொகையை விட, ஏதேனும் முரண்பாடுகள் இருந்தாலோ அல்லது வேட்பாளர்கள் அதிகமாக செலவழித்திருந்தாலோ, அந்த வேட்பாளர் மீது பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் ஆணையகம் அறிவித்துள்ளது.