நாட்டின் சுபீட்சத்தை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக பசிலின் சிந்தனையை செயற்படுத்தியமையினால் கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்துடன் பகைமையை வளர்த்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு 3 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது சவாலான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சமூகத்தில் பெரும் மரியாதை இருப்பதாகவும், அதனால் அந்த மரியாதையை காப்பாற்றும் வகையில் அவர் அரசியல் மேடைக்கு வரக்கூடாது எனவும் கம்மன்பில எடுத்துரைத்துள்ளார்.
மகிந்த வெளியேற வேண்டும்
மேலும், இந்த நாட்டின் அரசியலில் இருந்து பெருமிதத்துடன் மகிந்த வெளியேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கம்மன்பில,
ஜனாதிபதித் தேர்தலுக்கான வித்தியாசமான தந்திரோபாய தேர்தல் விஞ்ஞாபனத்தை திலித் ஜயவீர சமர்ப்பித்துள்ளார்.
திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரசாரக் கூட்டத் தொடரின் ஆரம்பப் பேரணி எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் மைதானத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் கூட்டமைப்பு
தேசிய அரசியல் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பையும் பிரிவினையையும் விதைத்த சர்வதேச சக்திகள் இந்த நாட்டை இரண்டாகப் பிரித்து யாழ்ப்பாணத்தை வேறொரு நாட்டின் தலைநகராக மாற்றும் முயற்சியைத் தோற்கடிக்கப் பங்களித்த காரணத்தினால்தான் நாங்கள் யாழ்ப்பாணம் செல்கிறோம்.
ஏனெனில் இந்த நாட்டை விட்டு வெளியேறிய ஒரு கூட்டத்தின் பணத்திலும் சர்வதேச சக்திகளின் பணத்திலும் எப்போதும் இனவாதத்தை விதைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.
திலித் ஜயவீர மற்ற வேட்பாளர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டவர் என்பதை நாடு முழுவதும் எதிர்கால பேரணிகளில் தெளிவுபடுத்துவோம்.
திலித் மட்டுமே தேர்தல் அறிக்கைக்கு பதிலாக ஒரு மூலோபாய திட்டத்தை முன்வைத்துள்ளார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் வழக்கு தொடர வாய்ப்பு தருவதாக திலித் கூறுகிறார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் அவரின் பார்வை வேறுபட்டது” என்றார்.