லெபனானின்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி இப்ராஹிம் முஹம்மது அல்-குபாசி என்ற முக்கிய தளபதியையே கொன்றதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே கூறினார்.
ஏவுகணை மற்றும் ரொக்கெட் படைப்பிரிவின் தளபதி
அல்-குபைசி ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ரொக்கெட் படைப்பிரிவின் தளபதியாக இருந்தார் என்று அட்ரே எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் தளபதி பல மூத்த அதிகாரிகளுடன் இருந்ததாக அவரது பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பணியாளர்கள் பலி
இதேவேளை லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது தமது ஒரு ஊழியர் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் கொல்லப்பட்டதாக ஐநா அகதிகள் நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டினா டார்விச் என்பவர் கிழக்கு லெபனானில் 12 ஆண்டுகளாக தமது நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்த கட்டிடம் திங்களன்று இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
“அவரது கணவர் மற்றும் அவரது குழந்தைகளில் ஒருவரும் மீட்கப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டினா மற்றும் அவரது இளைய மகனின் உடல்கள் இன்று சோகமாக மீட்கப்பட்டன” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அலி பாஸ்மா என்ற ஒப்பந்ததாரரும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவர் திங்கட்கிழமை இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர் இன்று முன்னதாகவே புதைக்கப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது. ஏழு ஆண்டுகளாக அவர் பணிபுரிந்து வந்தார்.
மூடப்பட்டன பாடசாலைகள்
இதனிடையே லெபனான் அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள பாலர் பாடசாலைகளை வார இறுதி வரை மூடுவதாக அறிவித்துள்ளது.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் அதே காலத்திற்கு மூடப்படும்.
அண்மைய நாட்களில், மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களாக பாடசாலைகள் மாற்றப்பட்டுள்ளன.