வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்கள்) தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய தேவையான சேவைகளை வழங்க தயாராக உள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க (Dushan Wijesinghe) தெரிவித்துள்ளார்.
விமானப்படைத் தளம்
இதனடிப்படையில், ரத்மலானை, ஹிங்குராங்கொட மற்றும் பலாலி விமானப்படைத் தளங்களில் உலங்கு வானூர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடற்படை மற்றும் இராணுவ நிவாரணக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு தேவைப்படுபவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சீரற்ற வானிலை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும், பலத்த மழை காரணமாக கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.