புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசன பகிர்வு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதற்காக கிடைக்கப்பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் (Ravi Karunanayake ) பெயர் முன் மொழியப்பட்டது.
ரவி கருணாநாயக்க தாமாகவே இவ்வாறு தனது பெயரை முன்மொழிந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பொதுஜன முன்னணியின் பிளவடைந்த குழு
இவ்வாறான ஒரு பின்னணியில் கூட்டணியில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் ரவி கருணாநாயக்கவின் செயற்பாடு குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி, மகஜன எக்சக்பெரமுன, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிளவடைந்த குழு என்பன கூட்டாக இணைந்து கடந்த பொது தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதே சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்.
பொதுத் தேர்தலுக்காக புதிய ஜனநாயக முன்னணி அன்னப்பட்சி சின்னத்தை மாற்றி எரிவாயு சிலிண்டர் சின்னத்தை பெற்றுக் கொண்டது.
இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை
புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் மீது தனது செல்வாக்கை பயன்படுத்தி ரவி கருணா நாயக்க, தேசிய பட்டியலுக்கு தனது பெயரை இட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக இந்த ஆசனத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை என்ற போதிலும் இந்த ஆசனம் வழங்குவது தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் கருத்துக்களை கேட்டறிந்திருக்க வேண்டுமென கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒரு ஆசனத்தை நிரப்புவது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.