இலங்கையில்(Sri lanka) விவசாயத்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா(USA) கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் மற்றும் கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த(K. D. Lalkantha) ஆகியோருக்கு இடையில் நேற்று (18) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா கரிசனை
கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது, விவசாயத்துறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் அமைச்சர் லால்காந்த விருப்பம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளல், உள்நாட்டு விவசாய அமைப்புகளை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.