பாடசாலை ஆசிரியர்கள், தமது மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மேல் மாகாண கல்வி வலய அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதமும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜெயசிங்க(Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் சில அதிகாரிகள் வேண்டுமென்றே அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த விடயத்தை கையாண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அரசாங்கத்தைப் பாதுகாக்க தாம் நேரடியாக தலையிடுவதாக ஜெயசிங்க கூறியுள்ளார்.
காலாவதியான பணி நடைமுறை
இந்தநிலையில் காலாவதியான பணி நடைமுறைகளைக் கைவிட்டு, நாட்டை புதிய மற்றும் முற்போக்கான திசையில் வழிநடத்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்களுக்குத் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகளில், சம்பள முரண்பாடுகள், இடமாற்றக் கொள்கைகள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் போன்றவை உள்ளன.
இந்த சூழ்நிலையில், ஆசிரியர்களின் கல்வி கட்டணங்களை ரத்துச்செய்வதற்கு முன்னுரிமை வழங்கவேண்டுமா என்று பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கேள்வி எழுப்பியுள்ளார் .