மன்னார் (Mannar) மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம்
ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பகுதியிலுள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான
இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நேற்று (20) தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக
பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்
திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் இடம்பெயரும் நிலை
இதனால் மல்வத்து ஓயா எனப்படும் அருவியாற்றினை அண்டிய பகுதிகளாக
உள்ள நானாட்டான் மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல
கிராமங்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மடுக்கரை, இராசமடு, அச்சங்குளம் போன்ற கிராமத்து மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு அறிவித்தல்கள்
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது அருவி ஆற்றில் 13.2 அடி நீர் வரத்து உள்ளது. இந்த நீர்வரத்துக்கு
அதிகமானால் மக்கள் கட்டாயம் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ள அபாயம்
அத்துடன் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டால் நானாட்டான் டிலாசால் கல்லூரி
மற்றும் மோட்டக்கடை சிவராஜா வித்தியாலயங்களில் தங்குவதற்கான ஒழுங்குகள்
செய்யப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் அருவி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால்
அருவி ஆற்றில் கடற்றொழிலில் ஈடுபடும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக
தெரிவித்துள்ளனர்.