காலி, தெமட்டகஹகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி 42 வயதுடைய கணவனை காணவில்லை என அவரது மனைவி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போன நபரின் சடலம் தெமட்டகஹகந்த, பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
காட்டு விலங்கு
கிணறு அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கான மின்சார கம்பியில் மோதி உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, கிணற்றில் உடலை வீசி மூடியிருப்பது தெரியவந்துள்ளது.
அதற்கமைய உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 38 மற்றும் 46 வயதுடைய தெமட்டகஹகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாகும். எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.