ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை மர உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு நாடாளுமன்றத்தில் கூடியபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தற்போது, ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட எம். ஓ. பி. 55,000 மெட்ரிக் டன் உரத்தில், 27,500 மெட்ரிக் டன்களைப் பயன்படுத்தி தென்னை பயிர்ச்செய்கைக்கான 56,000 மெட்ரிக் டன் கலப்பு உரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விதை தேங்காய்கள் உற்பத்தி
இதன்படி, ரூ.9500 மதிப்புள்ள 50 கிலோகிராம் உர மூட்டை, இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளுக்கு ரூ.4,000 சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு 36,000 ஏக்கர் தென்னையை புதிதாக நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் விதை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

