வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து, போரினால் ஏற்பட்ட அழிவினால் காணி உரிமையை நிரூபிப்பது கடினமான காரியமாக மாறியுள்ளது.
இந்நிலையில், வடக்கு மக்களுக்குச் சொந்தமான, நான்கு கடலோர மாவட்டங்களில் உள்ள, சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணியை கையகப்படுத்தும் நோக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் மீளப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்கும் காணி அமைச்சருக்கும் இடையேயான அவசரக் கூட்டத்திற்கு
அழைக்கப்பட்ட, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய
வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள், 2025 மார்ச் 28 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430ஐ இரத்து செய்யுமாறு கடுமையாகக்
கோரியிருந்தனர்.
அதனை தொடர்ந்து, வர்த்தமானி அறிவிப்பு இன்று இரத்து செய்யப்பட்டதை காணி அமைச்சும்
உறுதிப்படுத்தியது.
காணி உரிமை
காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், அதன்
அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,941 ஏக்கர் காணியின் உரிமை மூன்று
மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படா விட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும்
என எச்சரித்திருந்தது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வவுனியாவைத் தவிர்த்து, வடக்கு
மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் மொத்தமாக 5,941 ஏக்கர் காணி
உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703, யாழ்ப்பாண
மாவட்டத்தில் 3,669, கிளிநொச்சி மாவட்டத்தில் 515 மற்றும் மன்னார்
மாவட்டத்தில் 54 ஏக்கர் காணி உள்ளடங்கும்.
அரசாங்கம் தங்களது காணியை கையகப்படுத்த முயற்சிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த
தமிழ் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் உள்ள தமிழ்
பிரதிநிதிகளும் முக்கிய காணி உரிமை ஆர்வலர்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பை
கடுமையாக எதிர்த்தனர்.
எழுந்த கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, மே 23ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தின் குழு அறை
இல. 1இல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச
அதிகாரிகள் தலைமையிலான குழுவைக் கூட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வடக்கு,
கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு
இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை
கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
பிரதமருடன் கலந்துரையாடல்
காணியை கையளிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை ஒரு ‘தவறான வழிமுறை’ என, வடக்கு
மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
“பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்தி,
சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும்
என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்றும் மக்களின் நிலங்களை எந்த வகையிலும்
கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.” என பிரதமரின் ஊடகப் பிரிவு
அறிவித்துள்ளது.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி
கலந்துரையாடலில் பங்கேற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும்
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் சர்ச்சைக்குரிய வர்த்தமானி
அறிவிப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
கே.டி.லால்காந்த, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, விவசாயம், கால்நடை வளங்கள்,
காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, மேலதிக அரச
தலைமை வழக்குரைஞர் விக்கும் டி அப்ரூ, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி
மற்றும் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், காணி பதிவுத்
திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டோர் இந்த
கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
சுமந்திரனின் கடிதம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசால் 2025 மார்ச் 28 வெள்ளிக்கிழமை
வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430, மே 26ஆம் திகதி அன்று இரத்து செய்யப்பட்டதாக,
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர்
டி.பீ. விக்ரமசிங்க, இன்றைய தினம் தெரிவித்தார்.
2025, மே 3 அன்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு, இந்த விடயம் குறித்து
கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வடக்கில் காணி கையகப்படுத்த தற்போதைய
அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் இந்தச் சட்டம் மக்களின் காணிகளை கைப்பற்ற
பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் எமது மக்கள்
நூற்றாண்டுகளாக பாவித்து வந்த, ஆனால் தெளிவான உரித்தாவணங்கள் இல்லாத காணிகளை
பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.”
கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக பலமுறை இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அவர்களின்
காணிகளில் குடியேறவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த முன்னாள் தமிழ் மக்கள்
பிரதிநிதி, தற்போதைய சூழ்நிலையில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது ஏன்
பொருத்தமானதல்ல என்பதற்கான பிற காரணங்களுடன் கூடுதலாக, நான்கு காரணங்களின்
அடிப்படையில் அவர் விளக்கமளித்திருந்தார்.
இதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன், இன்றைய தினம் சமூக ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி அநுர குமார
திஸாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

