டிஜிட்டல் அடையாள அட்டைக்காக மக்களது தரவுகளைப் பலாத்காரமாகப் பெற்றுக் கொள்ள முடியாது.இதற்கெதிராக நீதிமன்றம் செல்வோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசிய வலயத்தில் பல குழப்பங்கள்
அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இந்தியா தெற்காசிய வலயத்தில் பல குழப்பங்களை உருவாக்கிய நாடு. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆயுதப் பயிற்சி, பணம் வழங்கியது மட்டுமல்ல எமது நாட்டை பிளவுபடுத்துவதற்குத் தமிழ் கிளர்ச்சி குழுக்களுக்கும் பணம் வழங்கி ஊக்குவித்துள்ளது.

அதுமட்டுமல்ல எமது அரசியலில் நேரடியாக தலையிடுவதோடு. இன்றும் எதிரக்கட்சிகளுக்குப் பணம் வழங்குகிறது.
ஆதலால் அவர்கள் இது தொடர்பில் வாய்திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையிலேயே இந்தியாவானது இலங்கையின் மலையக அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.
எமது தரவுகளைப் பெற்றுக் கொண்டு
இந்தியா ஈரானுக்கு வழங்கிய தொழில்நுட்பங்களே இன்று இஸ்ரேல் அந்நாட்டுத் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

ஏனென்றால் இந்தியா வழங்கிய தொழில்நுட்பங்கள் இஸ்ரேல் நாட்டினதாகும்.அத்தரவுகளைக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இவ்வாறான சம்பங்களை நோக்கும் போது எமது தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் இந்தியாவின் நிலைப்பாடு ஏதுவாக இருக்கும் என ஊகிக்க முடியும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர தற்போது மௌனம் காக்கின்றார் என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.

