அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், 20% வரி வீதம் மேலும் குறைப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வாய்ப்புகளைக் கண்காணித்து மேலும் வரி குறைப்புகளைப் பற்றி கலந்துரையாட நம்புவதாக சூரியப்பெரும கூறியுள்ளார்.
கடுமையாக உழைப்பு
இந்த நிலையில், 20% வரி வீதத்தை பெறுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் மகிந்த சமரசிங்க மற்றும் பலர் 90 நாட்கள் என்ற வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கடுமையாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட அமெரிக்கத் தரப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இலங்கை ஒப்பந்தங்கள்
இதேவேளை, இந்த வரிகள் விதிக்கப்பட்டதன் மூலம், ஏற்றுமதி தொடர்பாகவும் நேர்மறையான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து மேலும் பல விவரங்கள் எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும், இரு நாடுகளும் எதிர்காலத்தில் பரஸ்பர பயனடையும் என்றும் அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.