எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் பாதிக்கப்பட போவது தமிழ்நாட்டு வறிய கடற்றொழிலாளர்களும் வடபகுதி கடற்றொழிலாளர்களும்தான் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
அதனால் பண முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய மீன்பிடி
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வறிய மக்களை திசை திருப்பும் நோக்கில் அவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி இந்தியாவிலே அரசியல்வாதிகளும் இழுவை மடி தொழிலாளர்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும், கடையடைப்பில் ஈடுபடுகின்றார்கள்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் பாதிக்கப்படுவது வடபகுதி மீனவர்களே. இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுகின்றவேளை அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் போது அப்பாவி இந்திய மீனவர்களுமே இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். முதலாளிகளும் அரசியல்வாதிகளும் தப்பி விடுவார்கள்.
பேச்சுவார்த்தை
இது ஒரு தடை செய்யப்பட்ட சட்டவிரோத தொழில். இந்த சட்டவிரோத தொழிலால் நாங்கள் இதுவரை பட்ட துன்பமும் போதும். எமது தொப்புள்கொடி உறவு என்று கூறிக்கொண்டு எமது வாழ்வாதாரத்தையும் வளங்களையும் அழிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால் இரண்டு நாட்டு அரசாங்கங்களும், இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களும் இணைந்து பேசலாம். அதற்கு நாங்கள் உடன்படுகின்றோம்.
இந்த சட்டவிரோத தொழில் மூலம் வளங்கள் அழிவதால் எமக்கு மாத்திரம் பாதிப்பு இல்லை உங்களுக்கும் பாதிப்பே. எனவே இந்த தொழிலை செய்ய வேண்டாம்.” என்றார்.

