இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் திகதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 7 ஆம் திகதி வரும் நிகினி போயா நாளில் இரவு 8.58 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 2.25 மணி வரை சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு சந்திர கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும் எனவும் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன சுட்டிகாட்டியுள்ளார்.

07 ஆம் திகதி இரவு 11.01 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 12.22 மணி வரை முழு சந்திர கிரகணம் தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திர கிரகணம் உலக மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதத்தினருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என கூறப்படுகிறது.
2028 வரை கிடைக்காத வாய்ப்பு
இதேவேளை, 2028 ஆம் ஆண்டு வரை இலங்கையர்களுக்கு இதுபோன்ற முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு கிடைக்காது என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு அரிய நிகழ்வைப் பயன்படுத்தி பாடசாலை மட்டத்தில் இரவு வான கண்காணிப்பு முகாம்களை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

