தான் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலைகளுக்கு சிபாரிசு செய்திருந்தால் அல்லது தனது பெயரில் எடுத்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தன் மீது சட்டநடவடிக்கை எடுத்து தனது பதவியை பறிப்பதற்கு பூரணமாக சம்மதிக்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(8) நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 2025 ஒக்டோபர் 23ஆம் திகதியன்று நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டதாக குறிப்பிட்டு உண்மைக்கும் அறத்திற்கும் மாறான வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தினால் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிவில் புத்தி பெரமுன அமைப்பை சேர்ந்த சஞ்சய் மகவத் என்பவரால் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பார்வையிட்டேன்.
இந்த விடயம் குறித்து நேர்மையான விசாரணை நடத்துமாறு குறிப்பிட்டிருந்தேன்.
மூன்றரை மாதங்கள் கடந்த போதும் நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

