Home இலங்கை சமூகம் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு குளீரூட்டப்பட்ட அறைகளை அமைக்குமாறு கோரிக்கை

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு குளீரூட்டப்பட்ட அறைகளை அமைக்குமாறு கோரிக்கை

0

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து
வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அமைச்சிற்கு பொருளாதார மத்திய நிலையம் உற்படாது எனினும், விவசாயிகள்
நன்மை கருதி 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுப்பதாக விவசாயம், காணி
மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன
அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

உற்பத்தி பொருட்கள் 

மேலும் குறிப்பிடுகையில், “வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும்
தமது மரக்கறி உற்பத்தி பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை வாங்கும் மொத்த வியாபாரிகள் அவற்றை
பல இடங்களில் இருந்தும் கொள்வனவு செய்ய வரும், குறிப்பாக தம்புள்ளையை சேர்ந்த
வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் தினமும் 4000
தொடக்கம் 5000 கிலோ வரையிலான மரக்கறிகள் அன்றைய தினம் விற்பனை செய்யப்பட
முடியாத நிலையில் அதனை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய வசதியின்மையால்
பழுதடைகின்றன.

இதனால் பொருளாதார மத்திய நிலைய மொத்த வியாபாரிகள் அதிக
நட்டத்தையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

ஆகையினால், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் தினமும் எஞ்சுகின்ற மேலதிக
மரக்கறிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய
குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்கும் செயற்பாட்டை விவசாய அமைச்சின் 2026ம்
ஆண்டுக்கான திட்டத்தில் உள்வாங்கி அவற்றை அமைத்துத்தர வேண்டும்” என கோரிக்கை
விடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version