ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அச்சுறுத்தல் பேச்சுக்கு நாம் அஞ்சப்போவதில்லை என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தேசியக் கட்சி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் தேவபிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் தடை போடுமானால் அதற்காக எந்த முடிவும் எடுக்க தயங்க மாட்டோம் என நேற்று(17.09.2025) கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத் தொகுதியில், 06 தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அஜித் தேவபிரிய,
“இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பை எதிர்த்து, அதன் ஊழியர்கள் 14 நாட்களாக சுகயீன விடுமுறை மற்றும் சட்டப்படி வேலை போன்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நட்டஈடு
மின்சார சபை ஊழியர்கள் உங்களின் அடாத்தான பேச்சுக்கும் அச்சுறுத்தல்களுக்கு பயந்தவர்கள் அல்லர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததை மறந்து விட்டீர்களா?
அரசாங்கத்திற்கு 159 உறுப்பினர்கள் இருப்பதால் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்க முடியாது. ஜனாதிபதிக்கு நாம் தெளிவாக குறிப்பிடுவது என்னவென்றால், மக்களுக்கு ஒளிவுமறைவின்றி காரணங்களை கூறுங்கள். மக்களை குழப்ப வேண்டாம்.
நீங்கள் கூறுவது போல் எங்களுக்கு போக முடியாது. இது நீங்கள் கொடுத்த தொழிலில்லை. உரிய நட்டஈட்டை வழங்கினால் விலகி செல்வதற்கு ஊழியர்கள் நிறைய பேர் தயாராக உள்ளனர்.
ஆனால், அவ்வாறு செய்தால் மின்சார கட்டணமும் உயர்வடையும். நாங்கள் நட்டஈடும் கேட்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
