அநுர அரசாங்கம் இலட்சக்கணக்கில் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய அலுவலகத்தை பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அரசாங்கம் வெளியிடும் தகவலுக்கமைய, அவர்கள் ஒரு அரசியல் வேட்டைக்குத் தயாராகி வருவது தெளிவாகின்றது.
அரசியல் அடக்குமுறை
அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தாலும், அதற்கான திட்டம் என்ன என்பதை அறிவிக்கவில்லை.
அந்த சூழ்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்குள்ளான அனைவருக்கும் ஆதரவாக நிற்க சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்தது. அதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அரச இயந்திரத்திற்குள் ஏதோ ஒரு வகையான வேட்டை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அதில், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மக்களுக்கு தெரியவந்துவிட்டது. இந்த அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தைப் போலவே அரசியல் அடக்குமுறையைக் கொண்டு வந்து, திருடனைப் பிடித்தோம், சிறைப்படுத்துகிறோம் என கூறி அரசியல் பிரசாரத்தை தொடர அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது.
இதேவேளை, ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அரசாங்கம் அச்சுறுத்தும் வகையில் செயற்படுகிறது.
ஊடக அடக்குமுறையின் அடுத்த கட்டம் அரசியல் அடக்குமுறையாகும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் நம்மைத் தடுக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/APmvzSD1Iq0