Home இலங்கை அரசியல் மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

0

குடும்பம் மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டுக்கு மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் என கூறப்படும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க கொன்சல் ஜெனரல் லலித் சந்திரதாஸவும் ஒருவர் தெரிவிக்கப்படுகிறது.

மீள அழைக்கும் பட்டியல்

அத்தோடு, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கொன்சல் ஜெனரல் அனுர பெர்னாண்டோ மற்றும் இந்தியாவின் சென்னையில் துணை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய டொக்டர்.டி.வெங்கடேஸ்வரனும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் கொன்சல் ஜெனரலாகப் பணியாற்றிய எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானாவும் அரசாங்கத்தின் மீள அழைக்கும் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய நிஷான் மாணிக் முத்துகிருஷ்ணா மற்றும் மூன்றாவது செயலாளராக கடமையாற்றிய தாரக திஸாநாயக்கவையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பலரை அழைக்க தீர்மானம் 

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளராக கடமையாற்றிய சேனியா புஞ்சிநிலமேயையும் இலங்கைக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளராக கடமையாற்றிய சஹஸ்ர பண்டார, இத்தாலியின் ரோம் நகரில் உள்ள தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக கடமையாற்றிய மெல்கி சந்திமா பெரேரா, அவுஸ்திரேலியாவின் கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளராக கடமையாற்றிய தினுகா கார்மலின் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரை அழைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இந்த நிலையில், உறவினர்கள் மற்றும் அரசியல் சார்பு அடிப்படையில் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ள மேலும் பலரை அழைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டிருந்த செய்தியின் அடிப்படையில் இந்த பெயர் பட்டியல் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version