முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது வசிக்கும் 3 சொகுசு வீடுகளின் மாத வாடகை மதிப்பு 75 லட்சம் ரூபாய் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வசிக்கும் கொழும்பு 07, நிதஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டின் மாத வாடகை 2 மில்லியன் ரூபாவாகும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும், கொழும்பு 08, விஜேராம வீதியில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்துள்ள வீட்டின் மாத வாடகை மதிப்பு 4.6 மில்லியன் ரூபாவாகும்.
அரச இல்லம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசிக்கும் வீட்டின் மாத வாடகை மதிப்பீடு 900,000 ரூபாய் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க இல்லத்தை ஏற்க மறுத்துள்ளார் அதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தான் பதவியில் இருந்து விலகியவுடன் அரசாங்க வீட்டுவசதி அல்லது பாதுகாப்பை நாடப் போவதில்லை என கூறிய ஜனாதிபதி, அரசியல்வாதிகளின் பராமரிப்புக்கான தேவையற்ற செலவுகளைக் குறைப்பதில் தனது நிர்வாகம் உறுதி பூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.