வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 50 இலட்சம் நிதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதனை கூறியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
இயல்பு வாழ்க்கை
“பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது.
மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள்,விவசாயம்,மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அரச அதிபர் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக்கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 இலட்சம் ரூபாய் நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி – நயன்
