முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றத் தவறினார்களா என்பது குறித்து விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குறித்த விசாரணை இடம்பெறுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(2025.12.16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
விசாரணை
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையை நிறைவேற்றத் தவறியதாக சில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் கடந்த 2025.12.11ஆம்திகதியன்று இரவு 7.45 மணியளவில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
விபத்து நடந்த நேரத்தில் காரில் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன் இருவரும் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், சாலை விபத்துக்குப் பிறகு, அசோக ரன்வல கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
