Home இலங்கை சமூகம் அம்பாறையில் துயரம் : கடலில் காணாமற்போன குடும்ப உறவுகள் சடலங்களாக மீட்பு

அம்பாறையில் துயரம் : கடலில் காணாமற்போன குடும்ப உறவுகள் சடலங்களாக மீட்பு

0

   அம்பாறை(ampara) திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் 15 வயதுடைய மகன் மற்றும் நந்தராஜின் சகோதரியின் மகனான 17 வயதுடைய மருமகன் ஆகிய மூவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடலுக்கு நீராட சென்றவர்கள்

குறித்த மூவரும் நேற்று புதன்கிழமை (25) மாலை நத்தார் பண்டிகையை முன்னிட்டு சங்கமன்கண்டி கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது நந்தராஜின் மகனும் மருமகனும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக நந்தராஜ் கடலில் குதித்த போது அவரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடற்படை மற்றும் காவல்துறையுடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வியாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் இன்று (26) காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது.

ஒன்றன்பின் ஒன்றாக கரை ஒதுங்கிய சடலங்கள்

இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்களை மீட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

NO COMMENTS

Exit mobile version