Home இலங்கை சமூகம் ஒரு வருடத்துக்கு முன்னர் கொலை செய்யப்பட்டவர் கழிப்பறைக் குழியிலிருந்து சடலமாக மீட்பு!

ஒரு வருடத்துக்கு முன்னர் கொலை செய்யப்பட்டவர் கழிப்பறைக் குழியிலிருந்து சடலமாக மீட்பு!

0

கம்பஹா – இந்துருகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் கொலை
செய்யப்பட்டு கழிப்பறைக் குழியினுள் போடப்பட்டிருந்த ஒருவரின் சடலம், நீதிமன்ற
உத்தரவின் பேரில் நேற்று பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் இந்துருகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான
நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி
இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த நபர் காணாமல் போனமை தொடர்பில் அவரது சகோதரர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில்
செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றின் உத்தரவு  

சுமார் ஒரு வருடகால விசாரணைக்குப் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில்,
பொலிஸார் நேற்று முன்தினம் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையின் பின்னணி அம்பலமானது.

கொலை செய்யப்பட்ட நபரும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் ஒன்றாகச்
சேர்ந்து மது விருந்து நடத்தியுள்ளனர் என்றும், அதன்போது ஏற்பட்ட வாக்குவாதம்
முற்றியதையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்றும் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

பின்னர் சடலத்தைக் கழிப்பறைக் குழியில் போட்டு மூடியதாகச் சந்தேகநபர்கள்
வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பூகொடை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று
முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக்
காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version