காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில்
குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டு
அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் குறித்த சடலம் தொடர்பில் காரைதீவு பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு
மாவட்டம் செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே
இன்று (3) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மேலும் சடலமாக மீட்கப்பட்ட குறித்த
குடும்பஸ்தரின் கழுத்து மற்றும் தலை தோல்பட்டை உள்ளிட்ட பகுதில் காயங்கள்
காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
மாவடிப்பள்ளி
பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாக இருந்ததுடன் நேற்று முதல்
காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது
குறிப்பிட்டார்.
மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ்
அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சென்று மேற்பார்வை செய்து விசாரணைகளை
துரிதப்படுத்தமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை இலவச ஜனாசா
சேவைகளை மேற்கொள்ளும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை
உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தங்களது ஒத்துழைப்பினை உரிய
தரப்பினருக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல்
பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள்
தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பான
விரிவான விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
