தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (Tamil Makkal Viduthalai Pulikal) பதில் தலைவர் உட்பட மூவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து (Colombo) வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் (Pillayan) கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர்
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியலயத்தை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுமார் 12 மணித்தியாலம் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் போது அங்கிருந்து ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி உட்பட 3 கையடக்க தொலைபேசிகள், சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, 9 மில்லிமீற்றர் ரக கைதுப்பாக்கியின் 5 தோட்டாக்கள் , ரிப்பீட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டது.
சி.ஐ.டி விசாரணை
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி தொடர்பாக் த.ம.வி.பு கட்சியின் வாழைச்சேனையை சேர்ந்த மார்கண் என்று அழைக்கப்படும் ஜயாத்துரை ரவி மற்றும் அவரின் உதவியாளர் குமரன் ஆகிய இருவரையும் நேற்று (05.06.2025) வாழைச்சேனை காவல்நிலையத்திற்கு சி.ஐ.டியினர் வரவழைத்து சுமார் 5 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவர்களை விடுவித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று (06.) பகல் 11.00 மணியளவில் வாழைச்சேனை பேத்தாளையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரான ஜெயம் என்பவரது வீட்டை சிஜடியினர் முற்றுகையிட்டனர்.
பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாழைச்சேனை காவல்நிலையத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

