கிளப் வசந்தவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புடன் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று (27) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அமல் சில்வாவும் உள்ளிடங்கியுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவரை மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவின் வீட்டில் தங்கவைக்குமாறு டுபாயில் இருந்து பணிப்புரைகள் கிடைத்ததாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
இதன்படி, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா, மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ஜூட்’ என்ற ஒருவர் தன்னை அழைத்து இரண்டு பேரை அனுப்புவதாக ‘கஞ்சிபானை இம்ரான்’ கூறியதாக தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.