யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல பகுதிகளில் “வெண் ஈ” தாக்கத்தால் பெருமளவான தென்னை
மரங்கள் பாதிப்படைந்து அழிவடையும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை முன்னாள் மானிப்பாய் (Manipay) பிரதேசசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார்.
வெண் ஈ தாக்கம்
வெண் ஈ தாக்கம் பாரிய அழிவை நிரந்தரமாக ஏற்படுத்தியுள்ளது. பல மரங்கள் காய்கள்
இல்லாமல், ஓலைகள் நிறம் மாறி காய்ந்தும், படும் நிலையிலும் பல மரங்கள் பட்டும்
உள்ளன.
இவற்றை விட அதன் எச்சங்களினால் தென்னை மரங்களின் பச்சயம் இல்லாமல்
மறைக்கப்படுவதுடன் மட்டுமல்ல அருகிலுள்ள பல பயன்தரு மரங்களான மாமரங்கள்,
பலாமரங்கள், வாழைகள் என சகல பயன்தரு மரங்களினதும், பயிர்களினதும் இலைகளும்
கறுப்பாக மாற்றமடைந்துள்ளன.
இதனால் எதிர்காலத்தில் பச்சயம் அற்ற ஒளித்தொகுப்பு நடைபெறாமல் ஏனைய பயிர்களும் மரங்களும் அதிகம் பாதிப்புள்ளாகி அழிவடைய போகின்றன.
பெண் தலைமைத்து குடும்பங்கள்
இந்த தாக்கத்தை உரிய விவசாய திணைக்களமோ, மாவட்ட செயலகமோ, பிரதேச செயலகங்களோ
கணக்கில் கொண்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளை செய்வதாக
தெரியவில்லை.
பல பெண் தலைமைத்து குடும்பங்கள், பொருளாதார கஷ்டம் உள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதாரங்களாக பயிரிட்டுள்ள தென்னை உட்பட ஏனைய பயன்தரு மரங்கள், பயிர்களும் வெண் ஈ தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளதால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வியாக மாறி வருகிறது.
ஆகவே சண்டிலிப்பாய்
பிரதேசெயலக பிரிவில் மட்டுமல்லாது முழு யாழ்ப்பாண மாவட்டத்திலும் வெண் ஈ
தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய விவசாய அமைச்சு வடக்குமாகாண ஆளுநர், மாவட்ட
செயலர் ஆகியோர் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென
ஜிப்பிரிக்கோ மேலும் தெரிவித்துள்ளார்.
