கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து இழப்பீடு வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தீர்மானித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் தலா 1 மில்லியன் ரூபாய் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
விடுவிக்கப்பட்ட பணம்
இந்தப் பணம் விபத்தில் உயிரிழந்த 22 பேர் வசித்து வந்த திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹெர, வெலிமட, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனகொட்டுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பிதிகம, வனாத்தவில்லுவ, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய, கந்தளே மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் இன்றும் உயிரிழந்து 23 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதுடன், சுமார் 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் நுவரெலியாவில் உள்ள ஆதார மருத்துவமனைகளிலும், பேராதனை மற்றும் கண்டியில் உள்ள போதனா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொத்மலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
