பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள 200 ரூபாய் நிதியை இடைநிறுத்துவதற்கு, சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (12) கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வேதன அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி
அரச நிதியை தனியார் துறையினருக்கு எவ்வாறு வழங்குவது? என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க எதிர்பார்க்கும் சலுகையை இல்லாது செய்யும் வகையில், அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களே ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்த காலங்களில் பெருந்தோட்டத்துறையினரின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, வெளிநாடுகளினூடாக கிடைத்த நிதியை, ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளனர்.
முன்னர் ஆட்சி நடத்திய பச்சை, நீல ஆட்சியாளர்களின் காலத்திலும் இதேநிலையே பேணப்பட்டது. தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் வழங்குவதற்காகப் பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதா என நாடாளுமன்ற உறுப்பினர்களே கேள்வியை முன்வைத்துள்ளனர்.” என தெரிவித்தார்.
மனோ கணேசன் கோரிக்கை
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் வேதன அதிகரிப்பு செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், எனினும் அதில் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, “அவ்வாறான சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை அரசாங்கம் உரிய முறையில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கும்.
முன்னாள் ஆட்சியாளர்களைப் போல மக்களின் பணத்தை சூறையாடாத அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் திகழ்கின்றது. அதற்கு முன்னுதாரணமாக, தனக்கான சலுகைகளை ஜனாதிபதி விட்டுக் கொடுத்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் தங்களுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில்லை“ என குறிப்பிட்டுள்ளார்.

