நுவரெலியாவில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி
தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன, பொல்பிட்டிய – களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே
இவர்கள் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்கா நகரை சேர்ந்த 25 வயது சந்தேக நபரும், அவரின் 20 வயதான கர்ப்பிணி
மனைவியும் தர்கா நகரில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில்
பயணித்துள்ளனர்.
இந்நிலையில், களுகல பகுதியில் உள்ள பொலிஸ் வீதி சோதனை சாவடியில் இவர்கள்
சோதனைக்குட்படுத்தப்பட்ட வேளை, அவர்கள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்கள்
மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் நடவடிக்கை
50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயின் என்பனவே இவ்வாறு
கைப்பற்றப்பட்டுள்ளன.
ஈசி கேஸ்மூலம் பணத்தை பெற்ற பின்னர் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்
போதைப்பொருளை வைத்துவிட்டு அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சந்தேக
நபர் தெரியப்படுத்துவார் என தெரியவந்துள்ளது.
இவர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பல பொலிஸ்
நிலையங்களில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்பு காவல் உத்தரவைப்
பெற்று, இவர்களிடம் போதைப்பொருள் வாங்கும் நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார்
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
