ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம்
சட்டவாட்சியைப் பலப்படுத்தி பாரிய
குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”இந்நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தின் போது பல தலைவர்கள், புத்தியாளர்கள்,
கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், போராளிகள், பொதுமக்கள் பலர் கடத்தப்பட்டும்,
கொல்லப்பட்டும் உள்ளனர்.
முன்னாள் எம்.பிக்கள் கொலை
அதனைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளதோடு மட்டுமல்லாமல், கௌரவர்களாக
உலாவி வருகின்றனர். அவர்களில் பலர் அதிகார சக்திகளால் பாதுகாக்கப்பட்டும்
வருகின்றனர். சட்டவாட்சி வலுப்பெற்றால், இத்தகைய குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவது உறுதியாகும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு,
சிவநேசன் ஆகிய தலைவர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மேலும், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான ரவீந்திரநாத்
தலைநகரில் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பையா அவரது வீட்டில் இருக்கும் போது பகலில்
சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
ஊடகவியலாளர்கள் படுகொலை
பிறேமினி தனுஸ்கோடி, சதிஸ்கரன் உட்பட தமிழர்
புனர்வாழ்வுக் கழக உத்தியோகத்தர்கள் சிலர் கடத்தப்பட்டு பொலன்னறுவை
தீவுச்சேனையில் கொல்லப்பட்டதாக அறியப்படுகிது.
மேலும் திருமலை விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். சிவராம், நடேசன்,
லசந்த விக்கிரமதுங்க, எக்னலிகொட, நிமலராஜன் போன்ற 40 இற்கு மேற்பட்ட
ஊடகவியலாளர்கள் 2006 தொடக்கம் 2015 இற்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டும்,
கொல்லப்பட்டும் உள்ளனர்.
தேற்றாத்தீவில் பொறியியலாளர் திருமதி லோகேஸ்வரன் என்ற
பெண்மணியான ஒரு பச்சைக் குழந்தையின் தாய் பெற்றோரின் கண்களுக்கு முன்னால்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொலை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி பக்தர்கள்
கொல்லப்பட்டனர். ஆனால் இச்சம்பவங்களுடன் தொடர்பான குற்றவாளிகள்
தண்டிக்கப்படவில்லை.
இதனால் நாட்டின் மனிதவுரிமைகள் சட்டவாட்சி ஜனநாயகம் போன்ற
விடயங்கள் கேவலப்படுத்தப்பட்டன.
இவற்றுக்கெல்லாம் உரிய பரிகாரம் தேவையென்றால், சட்டவாட்சி பலப்படுத்தப்பட்டு
குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டுத்
தண்டிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் நாட்டின் கௌரவத்தை மீண்டும். கட்டியெழுப்ப
முடியும். இதனை ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் செய்தால், வரவேற்புக்
கிடைக்கும். இல்லையேல் முந்திய அரசாங்கங்கள் போன்றதாக இந்த அரசாங்கமும்
அமைந்து விடும்.” என குறிப்பிட்டுள்ளார்.