இணைய மோசடி மைய சோதனைகளில் கிட்டத்தட்ட 1,600 வெளிநாட்டினர் கைது
செய்யப்பட்டதாக மியான்மார் தெரிவித்துள்ளது.
இதில் பெருமளவான சீன நாட்டவர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து எல்லையில் உள்ள ஒரு பிரபலமான இணைய மோசடி மையத்தில் ஐந்து நாட்களில்
கிட்டத்தட்ட 1,600 வெளிநாட்டினரை கைது செய்ததாக மியான்மார் இராணுவம் இன்று
தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மியான்மாரின் எல்லைப் பகுதிகளில் இந்த மோசடி
அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன.
இணைய பயனர்களை குறிவைத்து மோசடி
இந்த அலுவலகங்கள், தீமை தரும் செயற்பாடுகளுடன் இணைய பயனர்களை குறிவைத்து
மோசடிகளில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையிலேயே இன்று மோசடி மையம் ஒன்றில் இருந்து 1500 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இதேபோன்ற மையங்களில் தடுத்துவைக்கப்பட்டு பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கையின் இளைஞர்,யுவதிகள் பலரும் படை நடவடிக்கைகளின்
மூலம் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன்; சூதாட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட 2,893 கணினிகள், 21,750
கையடக்க தொலைபேசிகள்;, 101 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகள், 21
ரூட்டர்கள் மற்றும் ஏராளமான தொழில்துறை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல்
செய்துள்ளனர்.
உலகளாவிய பாரிய இழப்பு
முன்னதாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையிலிருந்து, மோசடிகள்
மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, சந்தேகத்திற்குரிய மியான்மார் மோசடி
மையங்களுக்கு அருகில் இருந்த 2,500 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் சாதனங்களை
எலோன் மஸ்க்கின் நிறுவனம் முடக்கியதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் குறித்த மோசடிக்காரர்களால் தென்கிழக்கு மற்றும் கிழக்கு
ஆசியாவில் மட்டும் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
வரை ஏமாற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய இழப்புகளில் “மிகப் பெரியதாக” இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள்
குறிப்பிட்டுள்ளது.
