மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலைமை
காணப்படுவதனால் மக்களை தமது சுற்றுச்சூழல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலான பாரிய டெங்கு
ஒழிப்பு சிரமதான பணிகள் இன்று (20.12.2025) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தூய்மைப்படுத்தும் நடவடிக்கை
மட்டக்களப்பு வாவிக்கரை பூங்கா தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலம் வரையிலான
மூன்று கிலோமீற்றர் வடிகான்களையும் வீதியின் மருங்குகளையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வடிகான்கள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் வடிகான்களுக்குள் தமது கழிவு
நீரை வெளியேற்றுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வீதிகளின் அருகில்
நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்த சிரமதான
பணியின்போது வீதிகளில் காணப்பட்ட பெருமளவான கழிவுப்பொருட்களும் மாநகரசபையினால்
அகற்றப்பட்டன.
இதன்போது பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதார அலுவலக
பிரிவுகளில் ஒவ்வொரு நாளும் டெங்கு நோயாளர்கள்
இனங்காணப்பட்டு வருகின்றார்கள்.
நுளம்பு பெருகும் அபாயம்
மழைக்கு பின்னர் இதன் அபாயத்தன்மை மிக அதிகமாக
காணப்படுகின்றது.
மழைநீர் தேங்கி அதன்மூலம் டெங்கு நுளம்பு பெருகும் அபாயத்தினை குறைக்கும்
வகையில் இன்றைய நாளில் மட்டக்களப்பு மாநகரசபை, வீதி அபிவிருத்தி
அதிகாரசபை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனைவரும் இணைந்து வடிகான்களை
சுத்தப்படுத்தும் பணியினை ஆரம்பித்திருக்கின்றோம்.
மிக முக்கியமாக பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாக
தேவைப்படுகின்றது. கொள்கலன்களை வடிகான்களுக்குள் போடுவது மற்றும் வீட்டு சூழலை
டெங்கு நுளம்புகள் பரவும் இடமாக வைத்திருப்பதை தவிர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
