Home இலங்கை சமூகம் எதிர்பார்ப்பை எட்டாத அபிவிருத்தித் திட்டங்கள் : வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

எதிர்பார்ப்பை எட்டாத அபிவிருத்தித் திட்டங்கள் : வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

0

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம்
எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட
மீளாய்வுக் கூட்டம் இன்று(29) இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டம்

மேலும் தெரிவிக்கையில், நடப்பு ஆண்டின் மூன்றிலொரு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திட்டங்களின்
முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாமல் உள்ளது.

எமது மாகாணத்துக்கு
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்வதுடன் அடுத்த ஆண்டு அதிகளவு
நிதியைக் கோரவேண்டும்.

அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களது
தலைமைத்துவத்தில்தான் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கத்தின் வெற்றி
தங்கியிருக்கின்றது.

கடந்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல திட்டங்களின்
நடைமுறையாக்கங்களை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று
பார்வையிடுவதுடன், இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டத்தை
நடைமுறைப்படுத்தவேண்டும்.

கறுப்புப் பட்டியலில் உள்வாங்க

திட்டங்களுக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. குறைந்த
விலையில் கேள்விகூறலைச் சமர்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதை
நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள்.

தவறிழைக்கும் ஒப்பந்தகாரர்களை
கறுப்புப் பட்டியலில் உள்வாங்கவேண்டும் என்பதை பல தடவைகள் சொல்லியுள்ளேன்.

அதை
நடைமுறைப்படுத்தவேண்டியது பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகளின்
பொறுப்பு. அதைச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்திலாவது பிரச்சினைகள் ஏற்படாமல்
பார்த்துக்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version