Home இலங்கை பொருளாதாரம் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: சுகாதார அமைச்சர் தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: சுகாதார அமைச்சர் தகவல்

0

1300 வைத்தியர்களும் 500இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார
அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு (Jaffna) நேற்று (17.07.2024) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ்
பத்திரண, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
‘உதயன்’ குழுமத் தலைவருமான ஈஸ்வரவாதம் சரவணபவனைச் சந்தித்துக்
கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள்.

வெகுவிரைவில் 3 ஆயிரத்து 500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில்,
அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம்.

வைத்தியர்களின் பற்றாக்குறை

ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றனர். இதனால் அரச
வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக் கூடியதாக
இருக்கின்றது.

தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்.
எனினும், தற்போது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை
பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 – 15 வரையிலான
வைத்தியர்கள் நாட்டுக்கு மீளவும் வருகை தந்து மீண்டும் பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.

இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version