Home உலகம் அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

0

அமெரிக்காவின்(us) 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (donald trump)இன்று(20) வோஷிங்டனில் உள்ள கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவியேற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாரம்பரியமாக, துணை ஜனாதிபதியின் பதவியேற்பு, ஜனாதிபதியின்பதவியேற்பு, ஜனாதிபதியின் தொடக்க உரை, முந்தைய ஜனாதிபதியின் புறப்பாடு, ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தில் கையொப்பமிடும் நிகழ்வு, மதிய உணவு ஆகியவை இடம்பெறும்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள்

நியூயோர்க்கின் பேராயர் கர்தினால் டிமோதி டோலன் பதவியேற்பு விழா பிரார்த்தனைக்கு தலைமை வகிப்பார்.

வோஷிங்டன் டிசியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் எலோன் மஸ்க் (இவர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளார்), மார்க் ஸுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜோன்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை

வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜோன்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை சேவையுடன் இன்றைய தின அலுவல் தொடங்கும்; அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்து, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் முதலாவது பெண்மணியாகவும் அழைக்கப்படவுள்ள மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு விருந்தளிப்பார்கள்.அதைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் மற்றும் தொடக்க உரைகள் நடைபெறும்.

இதேவேளையில், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸ் பதவியேற்பார். அவரைத் தொடர்ந்து டிரம்ப் தனது தொடக்க உரையை ஆற்றுவார். பின்னர், ஜனாதிபதியின் அறையில், டிரம்ப் தனது அரசில் இடம் பெறவுள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் மூத்த நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி சில பணி நியமனங்களில் கையொப்பமிடுவார்.

சில நேரங்களில் அரசின் உத்தரவுகள், பிரகடனங்கள் அல்லது நிர்வாக உத்தரவுகளிலும் புதிய ஜனாதிபதி கையொப்பமிடக்கூடும்.

இந்நிகழ்வுக்குப் பிறகு மதிய உணவு நிகழ்வு நடைபெறும்.

இறுதியாக, பென்சில்வேனியா அவென்யுவில் உள்ள கேப்பிடல் கட்டடத்திலிருந்து வெள்ளை மாளிகை வரை தலைவர்கள் அணிவகுப்பாக நடந்து செல்வர்.

உள்ளரங்கில் பதவியேற்பு விழா

வழக்கமாக திறந்தவெளியில் ராணுவப் படைப் பிரிவுகள், சிட்டிசன் குரூப் எனப்படும் குடிமக்கள் குழுக்கள், அணிவகுக்கும் இசைக் குழுக்கள் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

இம்முறை உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடப்பதால் 20,000 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட கேப்பிட்டல் ஒன் அரங்கில் இந்த மரியாதை நிமித்தமான அணிவகுப்பு நடைபெறும். 

 ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டொனால்ட் டிரம்ப் நேற்று(19) காலை தனது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோனுடன் தலைநகருக்கு வந்தார். அதற்கு முன்னதாக, அவர் வர்ஜீனியாவில் உள்ள தனது தோட்டத்தில் மூன்று ஆடம்பர வரவேற்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது, இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.

    

NO COMMENTS

Exit mobile version