Home இலங்கை அரசியல் ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலை செய்தது ஈ.பி.டி.பி : விசாரணை குறித்து சிறீதரன் எம்.பி கேள்வி

ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலை செய்தது ஈ.பி.டி.பி : விசாரணை குறித்து சிறீதரன் எம்.பி கேள்வி

0

நிமலராஜன், அற்புதன், நிக்கிலாஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்தது என டக்ளஸ் தேவானந்தாவுடன் (Douglas Devananda)18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா என கேள்வியெழுப்பியதுடன் அரசாங்கம் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (11) நடைபெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுப்பையா பொன்னையாவின் அறிவிப்பு 

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ”டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகாலமாக ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 2025.09.09 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது “நிமலராஜன், அற்புதன் மற்றும் நெடுந்தீவில் தற்காலிக உதவி அரசாங்க அதிபராக பதவி வகித்த நிக்கிலாஸ் என்பவரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்தது’ என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈ.பி.டி.பி தான் பல கொலைகளை செய்ததாகவும் சதா என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா, நிமலராஜனின் கொலை முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்

இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் மிக மோசமாக கொலை செய்யப்பட்டார். இதேபோல் பல பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றீர்கள்.

இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு தயாராக கூடாது. வெளியக பொறிமுறைக்குள் வராவின் இந்த நாட்டில் நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் எப்போது உறுதிப்படுத்தப்படாது. என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்கிறேன்“ என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/4uzuQDS1HVM

NO COMMENTS

Exit mobile version