பிரான்சின் (France) மார்சே நகரில் அமைந்துள்ள ரஷ்ய (Russia) தூதரகத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தூதரக பூந்தோட்ட பகுதியில் இனந்தெரியாத சிலர் 2 குண்டுகளை வீசி சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
அந்த பகுதியில், கார் ஒன்று நின்றிருந்தது. அது வேறொரு பகுதியில் இருந்து திருடப்பட்து என கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பிரான்ஸிடம் ரஷ்யா விடுத்த கோரிக்கை
இதுபற்றி ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, மார்சே நகரில் அமைந்த ரஷ்ய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும்.
இதுபற்றி பிரான்ஸ் உடனடியாக, முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ரஷ்ய அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என கூறினார்.
பின்புலத்தில் உக்ரைனா…!
கடந்த வாரம் புதன்கிழமை, ரஷ்யாவின் வெளியுறவு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட செய்தியில், ஐரோப்பாவில், குறிப்பிடும்படியாக ஜெர்மனி, போல்டிக் மற்றும் ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியங்கள் பற்றி உக்ரைன் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.