இளம் சுழற்பந்து வீச்சாளர் ஃபர்ஹான் அகமட்(Farhan Ahmed), முதல் தர கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற 159 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
இந்த சாதனையை அவர் தனது முதல் கவுண்டி போட்டியிலேயே முறியடித்ததும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை
இங்கிலாந்தில்(england) நடைபெறும் முக்கிய முதல்தர கிரிக்கெட் போட்டியாக கருதப்படும் கவுண்டி போட்டியின் முதல் பிரிவு 53வது போட்டியாக நேற்று (01) நிறைவடைந்த சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஹமட் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
நொட்டிங்ஹாம்ஷயர் கவுண்டி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகமட், இந்தப் போட்டியில் 217 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை (7/140, 3/77) வீழ்த்தினார்.
இந்த விக்கெட்டக்களை வீழ்த்தும்போது அகமதுவுக்கு 16 வயது 192 நாட்கள் ஆகும்.
1865 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நிகழ்ந்த முதல் சாதனை
அவருக்கு முன், டபிள்யூ.கிறேஸ்(W. G. Grace), பிரிட்டிஷ் முதல்தர போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பந்து வீச்சாளர் ஆவார்.
159 ஆண்டுகளுக்கு முன்பு 1865 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் 84 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது அவருக்கு 16 வயது 340 நாட்கள் ஆகும்.
தற்போதைய இங்கிலாந்து அணியில் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளரான ரெஹான் அகமட், ஃபர்ஹானின் மூத்த சகோதரர் ஆவார்.