நுவரெலியா (Nuwara Eliya)- தலகல ஓயா ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்றைய தினம் (25.01.2025) மீட்கப்பட்டுள்ளது.
ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கிடந்ததை அவதானித்த மக்கள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளொன்றும் அவர், அணிந்திருந்த தலைக்கவசமும் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் தீயனைப்பு பிரிவினருக்கு அறிவித்து தேடுதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை (25.01.2025) விபத்து இடம்பெற்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து காவல்துறைக்கு இது தொடர்பில் அறிவித்ததை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டு பின்னர் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




