Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையில் அவசரமாக மூடப்பட்ட பாடசாலைகள்! கண்டுபிடிக்கப்பட்ட காரணம் – நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் அவசரமாக மூடப்பட்ட பாடசாலைகள்! கண்டுபிடிக்கப்பட்ட காரணம் – நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

0

கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி என்பன இதன் அறிகுறிகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு மாத காலத்தில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட 47 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது பெரும்பாலும் 14 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே பரவியுள்ளது.

நோய்ப் பரவல்

பாதிக்கப்பட்டவர்கள் தெனியாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானோர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், இந்நோய்ப் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அசுத்தமான நீர் அல்லது உணவின் மூலமாகவே இந்த வைரஸ் பரவியுள்ளதாகக் கருதுவதாகவும், எனவே குறித்த பிரதேச மக்கள் நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

வைரஸ் பரவலுக்கான காரணம்

அத்துடன் இந்த நோய் Meningitis வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 3, 4 நாட்களில் இந்நோய்ப் பரவல் ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

முறையான சிகிச்சைகளுடன் 6 முதல் 7 நாட்களில் இந்நோய் குணமடைந்துவிடும்.

பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு மூலமாகவே இந்த வைரஸ் பரவியுள்ளது.

எனவே, அப்பகுதி மக்கள் நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு பருகுமாறும், சுத்தமான உணவை உட்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

குறிப்பாக இந்த நோயாளர்கள் தெனியாய பகுதியில் இருந்து மாத்திரமே பதிவாகியுள்ளனர், எனவே ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. நோய் பரவும் அபாயம் தற்போது குறைவடைந்துள்ளது என்றார்.

தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு குறித்த பாடசாலைகள் அவசரமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/flu-outbreak-reported-in-deniyaya-1778235339

NO COMMENTS

Exit mobile version