கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சம்பவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குறித்த நபர் 7வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று அவரை தடுக்க முற்பட்டுள்ளது.
எனினும், அவர் காவல்துறை அதிகாரிகளையும் தாக்கிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த வெளிநாட்டவர், தங்கியிருந்த இடத்தில் இருந்த சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.