முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இதன் சட்டபூர்வ நிலை குறித்து ஆராய அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் சுமார் 50 சட்டத்தரணிகள் கொண்ட குழுவை அணுகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளின் பிரதிநிதிகள்
முதற்கட்ட கலந்துரையாடலானது, கடந்த ஞாயிற்று கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் பங்கேற்றதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
14 நாட்களுக்குள் வழக்கு
அத்துடன், இது தொடர்பான இரண்டாவது கலந்துரையாடலும் நேற்று முன்தினம் (08) நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் விரும்பியபடி அதை செயல்படுத்த முடியாது என குறித்த சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த 14 நாட்களுக்குள் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.